This post is also available in: English (ஆங்கிலம்) हिन्दी (ஹிந்தி) বাংলা (பெங்காலி) தமிழ் മലയാളം (மலையாளம்)
குழந்தை பிறந்தவுடன் அதன் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் தேவை.
உங்கள் உடலுக்கு இது தெரியும்- அதனால் தான் குழந்தைக்கு பால் தருவதற்கு ஏதுவாக நீங்கள் கருவுற்றதிலிருந்தே உடல் உங்களுடைய மார்பகங்களை தயார் செய்யத் தொடங்குகிறது.
ஆனாலும் என்னுடைய இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் நான் கருவுற்ற தாய்மார்களுக்காக எடுக்கும் வகுப்புகளில் பெரும்பாலான பெண்கள் தாய்ப்பாலூட்டுவதற்காக அவர்களுடைய மார்பகத்தை தயார்ப்படுத்த எதுவுமே செய்வதில்லை என்பதை தெரிந்துக் கொண்டேன்.
இது தவறு. தாய்ப்பால் கொடுப்பதற்கு உங்கள் மார்பகங்களை எப்படி தயார் செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.
- முதலில் உங்கள் மார்பகம் மீதான கூச்சத்தை விடுங்கள்.
ஒவ்வொரு நாளும் உங்கள் மார்பகங்களை கண்ணாடியில் கவனிக்க சிறிது நேரம் செலவிடுங்கள்.
ஆடை இல்லாமல் ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன் நின்று மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள். கர்ப்பகாலத்தில் மாதங்கள் செல்ல செல்ல மார்பகம் பெரிதாகும், ஆரியோலா வட்டம் பெரிதாக கூடுதல் கருப்பாக மாறும்.
உங்கள் முலைக்காம்புகள் உள்நோக்கி இழுத்திருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
அவற்றின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்தால் அவற்றை பராமரிப்பதர்கான ஆர்வம் உங்களுக்கு தானாக ஏற்படும்.
2. மார்பக சுகாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்
ஒவ்வொரு நாளும் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.
முலைக்காம்புகளில் சோப்பைப் பயன்படுத்த வேண்டாம். சோப்பு முலைக்காம்புகளில் வெடிப்பை ஏற்படுத்தி தொற்றுநோய் ஏற்பட வழிவகுக்கிறது.
மார்பகத்தின் அடிப்பகுதியை நன்கு உலர வைக்கவும். மார்பகங்கள் பெரிதாகும் போது, அடிப்பகுதியில் வியர்வை சேர்ந்து அதனால் பூஞ்சைத் தொற்று ஏற்படும்.
3. வசதியான ப்ரா அணியுங்கள்.
கர்ப்பகாலத்தில் உங்கள் மார்பகத்தின் அளவு மாறும். உங்கள் மார்பகத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ற மாதிரி பிரா அளவை மாற்றுங்கள்.
உங்கள் ப்ரா முழு மார்பகத்தையும் மூட வேண்டும், அக்குள் பகுதியில் அல்லது நடுப்பகுதியில் பிதுங்கி வெளியே வரக்கூடாது.
பிராவின் கப் அளவு முலைக்காம்புகள் மீதும், பாலூட்டும் திசுக்கள் மீதும் அழுத்தம் ஏற்படுத்தாத அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும்.
உங்கள் மார்பகங்கள் கீழே தொங்காமல் தடுக்கும் அளவுக்கு உங்கள் ப்ரா ஸ்ட்ராப் உறுதியானதாகவும் அகலமாகவும் இருக்க வேண்டும். ஆனால் அவை உங்கள் தோள் மீதும் அழுத்தம் தரக்கூடாது.
4. மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள்
மூன்றாவது ட்ரைமெஸ்டரில்-குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெயால் உங்கள் மார்பகங்களை மசாஜ் செய்யத் தொடங்குங்கள்.
2 நிமிடங்களுக்கு மேல் மசாஜ் செய்யக்கூடாது, மேலும் முலைக்காம்பு மற்றும் மார்பக திசுக்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க மிகவும் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
முலைக்காம்புகளை வெளியே மென்மையாக இழுக்கும்படி மசாஜ் செய்ய வேண்டும், இதனால் முலைக்காம்புகள் குழந்தை வாயில் நன்றாகப் பொருந்தும். நீங்கள் மார்பக மசாஜைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது, இதனால் நீங்கள் சரியாக மசாஜ் செய்வதை உறுதி செய்வதுடன் பிரச்சினைகள் எதுவும் வராமல் தவிர்க்கலாம்.
5. உடற்பயிற்சி
மார்பகத்திற்கு நல்ல இரத்த ஓட்டத்தை உறுதி செய்வதற்கும் அதன் ஸ்கின் டோனை பராமரிப்பதற்கும் தினமும் ஒரு முறை கை மற்றும் தோள்பட்டை உடற்பயிற்சிகளை செய்யவும்.
உங்கள் கையை கடிகார திசையிலும், எதிர் கடிகார திசையிலும் சுழற்றுங்கள்.
கைகளை மேலே உயர்த்தி கீழிறக்கவும்.
கைகளை முன்புறம் கொண்டு வந்து உள்ளங்கைகளை ஒன்றுசேர்த்து பிறகு அப்படியே பழைய நிலைக்கு கொண்டு செல்லவும்.
இந்த பயிற்சிகளை மெதுவாக 5 முறை செய்யுங்கள், செய்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
உங்கள் குழந்தை பிறந்த பிறகு முதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் மார்பகங்கள் கிட்டத்தட்ட 24 மணி நேரம் பயன்படுத்தப்படும். கர்ப்பகாலத்தில் அதற்காக அவற்றை தயார்படுத்துங்கள், இதனால் பாலூட்டும் போது சிரமப்படாமல் அவை உங்களுக்கு ஒத்துழைக்கும்.
எழுதியவர்
டாக்டர். டெப்மிதா தத்தா MBBS, MD
டாக்டர்.டெப்மிதா தத்தா MBBS, MD ஒரு மருத்துவர், குழந்தை வளர்ப்பு ஆலோசகர், WPA whatparentsask.com இன் நிறுவனர். பள்ளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர் குழந்தை வளர்ப்பு தொடர்பான ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறார். பச்சிளங்குழத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு வகுப்புகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நடத்துகிறார். குழந்தை வளர்ப்பு, விளையாட்டு, கற்றல் மற்றும் உணவுப் பழக்கங்களில் இவர் ஒரு பிரபலமான நிபுணர். குழந்தை பராமரிப்பு பற்றிய அவரது புத்தகங்கள் ஜக்கர்னாட் புக்ஸ் மூலம் வெளியிடப்படுகின்றன மற்றும் அவர்கள் வெளியிட்ட புத்தகங்களில் அதிகம் வாசிக்கப்படுபவையாக அவை இருக்கின்றன. அவரது கனிவான அணுகுமுறை மற்றும் குழந்தை வளர்ப்பில் பிசியாலஜி மற்றும் மூளை அறிவியலை அவர் பயன்படுத்தும் முறைகளின் காரணமாக பல தேசிய மற்றும் பன்னாட்டு இதழ்களில் மேற்கோள் காட்டப்படுகிறார்.
This post is also available in: English (ஆங்கிலம்) हिन्दी (ஹிந்தி) বাংলা (பெங்காலி) தமிழ் മലയാളം (மலையாளம்)